Home

Friday, April 20, 2012

நேரு வீதியில் வாகனங்கள் நிறுத்த கட்டணம்! அரசு முடிவு

புதுச்சேரி, நேரு வீதியில் பழைய சிறைச்சாலையில் பார்க்கிங் செய்ய கட்டணம் வசூலிக்க அரசு முடிவு செய்துள்ளது. நேரு வீதியில் நிறுத்தும் மோட்டார் சைக்கிள்களுக்கு 5 ரூபாயும், கார்களுக்கு 30 ரூபாயும் கட்டணம் வசூலிக்கும் முறை விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.


புதுச்சேரியில் வாகன நெருக்கம் அதிகரித்து வருவதால் நகரப்பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கே இடமில்லாத நிலை உள்ளது. குறிப்பாக நேரு வீதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு யார் வாகனங்கள் எடுப்பார்கள் என்று காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் பழைய சிறைச்சாலையை சீரமைத்து வாகனம் நிறுத்தும் இடமாக மாற்றப்படும் என்று முதல்வர் ரங்கசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு பார்வையிட்டு அறிவித்து இருந்தார். 
அதன்படி சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பணியை உள்ளாட்சித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியின் போது எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், நேரு ஆகியோர் உடன் இருந்தனர். 10 தினங்களுக்குள் இந்த சிறைச்சாலை வாகன நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யும்படியும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


பழைய சிறைச்சாலையில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்த அனுமதிக்கும் போது 3 மணிநேரம் வரை நிறுத்துவதற்கு இலவசமாக அனுமதி வழங்கவும், அதற்கு மேல் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ. 5 கட்டணம் வசூலிக்கவும், அதுபோல் நேரு வீதியில் 3 மணிநேரம் வரை கார்கள் நிறுத்துவதற்கு இலவசமாக அனுமதி வழங்கவும், அதற்கு மேல் நிறுத்தும் கார்களுக்கு ரூ. 30 கட்டணம் வசூலிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment